பருவமழைக்கு முன் அனைத்து ஏரி மதகுகளையும் சீரமைக்க வேண்டும்:குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன் அனைத்து ஏரி மதகுகளையும் சீரமைக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-09-24 18:38 GMT

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை கெடிலம் ஆற்றுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கணாங்கொல்லை ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்து விதை விதைப்பதற்கு வானிலை முன்னறிவிப்பு தொடர்பான தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.

ஏரி மதகுகளை...

ஒரத்தூர்-பாதூர் வரை வயல்வழி இணைப்புச்சாலை அமைக்க வேண்டும். சீர்பாதநல்லூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். வெள்ளிமலை முதல் சின்னதிருப்பதி வரை பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கரடிச்சித்தூர் கிராமத்தில் தார்சாலை அமைக்க வேண்டும்.

தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே அனைத்து கிராமங்களிலும் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன் அனைத்து ஏரிகளிலும் உள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும். சிறுநாகலூர் முதல் சித்தேரி வரை உள்ள தார்சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

உத்தரவு

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்ற வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி அந்தந்த துறை அதிகாரிகள் இதுகுறித்து முறையாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் கொசு பெருக்கத்தை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் அவர் அறிவுறுத்தினார்.

இதில் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், வேளாண்மை துணை இயக்குனர் (திட்டம்) சுந்தரம், தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை (K-II) மேலாண்மை இயக்குனர் முருகேசன், தமிழ்நாடு மின்சார வாரியம் கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், விவசாய சங்க பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்