அனைத்து ஜமாத் கூட்டமைப்பு பொதுக்கூட்டம்
சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி, தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.;
சிதம்பரம்:
சிதம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் போல்நாராயணன் தெருவில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது ஜியாவுதீன் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கின், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் ஜெமினி ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை துணை தலைவர் அப்துல் ரகுமான், மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு முகமது நபியை விமர்சித்த பா.ஜ.க.வினரை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுகத் அலி, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சித்தார்த்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால.அறவாழி மற்றும் அரசியல் கட்சியினர், முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் முஹம்மது சிப்லி நன்றி கூறினார்.
மீண்டும் இனகலவரம்
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் மீண்டும் ஒரு இனகலவரத்தை உருவாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. பிரதமர் மோடி குஜராத்தின் முதல்-அமைச்சராக இருந்த போது, அங்கு இனகலவரம் ஏற்பட்டு, 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இன்று இந்த கலவரத்துக்கு யார் என்றே தெரியாமல் போய்விட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
நாட்டில் பல மதங்கள் உள்ளது. ஆனால், ஆளும் பா.ஜ.க. அரசு ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே இறைவழிபாடு, ஒரே நாடு என கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும்.
தேசிய பாதுகாப்பு சட்டம்
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷர்மா, முகமதுநபியை பற்றி விமர்சித்திருக்கிறார். முகமதுநபியை பற்றி அந்த மதத்தை சாராத ஒருவர் விமர்சிக்கலாமா? அப்படி விமர்சித்தால் கலவரம்தான் வரும். மக்களுக்கு கருத்து வேறுபாடுதான் வரும். மக்களை பிளவுபடுத்துவதான் பா.ஜ.க.வின் நோக்கமாகும்.
முகமதுநபியை விமர்சித்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடிமை கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. இதனால் அக்கட்சி இன்றை தினம் இழிவு நிலைக்கு சென்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல்ரஹ்மான், சென்னை மறை மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ், எஸ்.எம்.இதயத்துல்லா, முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.