அனைத்து துறைகளும் 'நம்பர் ஒன்' இலக்கை அடைய பணியாற்றுங்கள் அரசு செயலாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை

அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை என்றும், அனைத்து துறைகளும் ‘நம்பர் ஒன்’ இலக்கை அடைய பணியாற்ற வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-09-14 00:18 GMT

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அரசு துறை செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு திட்டங்கள் தொடங்கப்பட்ட நாள், அதன் வளர்ச்சி, தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்களை அரசு செயலாளர்கள் விளக்கினார்கள்.

அனைத்து திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3.30 மணி நேரம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரை வருமாறு:-

ஆட்சி அமைந்து 4-வது கூட்டத்தில் அனைவரையும் ஒருசேர சந்திப்பது மிகமிக முக்கியமான ஒன்று. ஒவ்வொருவரும் தனியாக செயல்பட இயலாது. ஒன்றோடு ஒன்று இணைந்தவைதான் அரசு துறைகள். எனவே ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அடிப்படையாகும். அனைத்து துறையும் வளர்ச்சி என்பது நம் இலக்கு. திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும், அமைச்சர்களுக்கும், துறை செயலாளர்களுக்கும்தான் இருக்கிறது.

அறிவிப்புகள்

ஒவ்வொரு துறை சார்பிலும் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2021-22-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,680 அறிவிப்புகளில் 100 அறிவிப்புகள் நீங்கலாக, 1,580 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, ஏறக்குறைய 94 சதவீத அறிவிப்புகள் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 2022-23-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,634 அறிவிப்புகளில கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆய்வின்போது, 23 சதவீத அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போதய நிலவரப்படி 57 சதவீத அறிவிப்புகளுக்கு அதாவது 937 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்குரிய ஆணைகளுக்கு அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் வெளியிடக்கூடிய வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்.

காலதாமதம்

சில திட்டங்களை அறிவிக்கிறோம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆகும் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். நிதி நெருக்கடியில் இருக்கிறோம் என்பது உண்மைதான். அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் தர வேண்டிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரால் அறிவிக்கப்படும் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடித்தாக வேண்டும். குறிப்பிட்ட சில அரசு துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களாலும் விமர்சனம் செய்யப்பட்டது. துறை செயலாளர்கள் இதுபோன்ற இனங்களில் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

நம்மிடம் ஒருங்கிணைந்த செயல்பாடு உள்ளது. ஆனால் உங்களுக்கும், உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளுக்கும் அதே ஒருங்கிணைப்பு இருக்கிறதா? என்றால் ஒருசில துறைகளில் இல்லை. அத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால்தான் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும், தொய்வும் ஏற்படுகிறது. அதை சரிசெய்வதற்காக இதுபோன்ற ஆலோசனை கூட்டம், கண்காணிப்பு கூட்டம், திட்டமிடும் கூட்டம், கலந்துரையாடல் கூட்டங்களை உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளோடு தொடர்ந்து நடத்துங்கள்.

அமைச்சருடன் இணக்கம்

அனைத்து துறை செயலாளர்களும், திட்டங்களுக்கான ஆணைகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், கள அளவிலே அத்திட்டங்கள் கடைகோடியில் உள்ள பயனாளிகளையும் சென்றடைவதையும் உறுதி செய்யவேண்டும். இதற்காகவே, இந்த அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலராக நியமித்துள்ளது. இவர்களுடைய செயல்பாடுகளை தலைமைச் செயலாளர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.

அமைச்சர்களுக்கும், துறை அதிகாரிகளுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடுகூட சில துறைகளில், சில நேரங்களில் ஏற்படாமல் இருப்பதாகவும் நான் அறிகிறேன். இது எங்கும், எப்போதும், எந்த துறையிலும், எந்த சூழலிலும் ஏற்படக்கூடாது. மக்களுக்கும், ஆட்சி நிர்வாகத்துக்குமான தொடர்பும், அவர்களது அனுபவங்களும், அனைவராலும் மதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்துக்கும், துறை செயலாளர்களுக்குமான ஒருங்கிணைப்பும், செயல்பாடும் அவசியமாகும். அரசின் கட்டளைகளை மட்டுமல்லாமல், மக்கள் நலன் கருதி நீங்கள் வைத்துள்ள உங்களது கனவு திட்டங்களையும் செயல்படுத்த முனைய வேண்டும்.

நேர்கோட்டில்...

முதல்-அமைச்சருடைய தகவல் பலகையில் ஒவ்வொரு துறையும் தங்கள் துறை சார்ந்த தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் இன்னும் சில துறைகள் இதில் தரவுகளை பதிவு செய்வதில் முனைப்பு காட்டவில்லை. இத்தகைய போக்கைத் தவிர்த்து, நல் ஆளுமையை இந்த அரசு வழங்குவதற்கு அனைத்து துறைகளும், தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சிறப்பான நிர்வாகத்தை அளிப்பது இந்த அரசினுடைய முக்கிய நோக்கம். அந்த வகையில், இளம் வல்லுநர்களின் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், முதல்-அமைச்சரின் முத்தாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு 30 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட துறைகள், அரசு நிர்வாகத்தை சிறப்பாக செம்மைப்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும். அவர்கள் நேரிடையாக முதல்-அமைச்சர் அலுவலகத்தோடு தொடர்பில் இருப்பார்கள்.

அமைச்சர்கள், துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய 4-ம் ஒரே நேர்கோட்டில் சென்றால், தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் 'நம்பர் ஒன்' என்ற இலக்கை நிச்சயமாக அடைய முடியும். அந்த அடிப்படையில் பணியாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்