அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி ஒற்றுமையுடன் இருக்க முடியும்

ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் நடந்துகொண்டால் அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி ஒற்றுமையுடன் இருக்க முடியும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

Update: 2023-01-27 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரத்தில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மனிதநேயம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளிடையே விழிப்புணர்வு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மனித நேயம் என்பது சக மனிதர்களிடத்தில் காட்டுவது மட்டுமல்ல, பிற உயிர்களிடத்தும் நாம் மனிதநேயத்தை கடைபிடித்து இரக்க குணத்துடன் செயல்பட வேண்டும். பிறரது துன்பத்தை நமது துன்பமாக கருதி பிறருக்கு உதவுதல், கோபம், பொறாமை, வெறுப்பு, குற்றம் காணுதல் போன்ற தீய குணங்களை தவிர்த்து சக மனிதர்களிடம் அன்பாக இருக்க பழகுவதே மனிதநேயமாகும்.

ஒற்றுமையுடன் இருக்க முடியும்

சமூகத்தில் பின்தங்கிய மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பின்தங்கிய மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்கள் கல்வி கற்பதற்காக உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

சமூகத்தில் ஏற்றத்தாழ்வின்றி பொதுமக்கள் மனிதநேயத்துடன் வாழ்ந்திட காவல்துறையின் பங்கு மிக இன்றியமையாததாக இருந்து வருகிறது. சமுதாயத்தில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரிய செயலாக உள்ளது. மனிதநேயத்துடன் நாம் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால் சமுதாயம் வளர்ச்சியடைவதுடன், நாம் அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி ஒற்றுமையுடன் இருந்திட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவராஜ், கோவிந்தராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பத்மலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்