சென்னையில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல வேண்டும்

சென்னையில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் மாவட்ட தலைநகரான ராணிப்பேட்டைக்குள் வந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-03 17:26 GMT

சென்னையில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் மாவட்ட தலைநகரான ராணிப்பேட்டைக்குள் வந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட தலைநகர்

ராணிப்பேட்டை நகரைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளது. ராணிப்பேட்டையிலும், அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ராணிப்பேட்டைக்கு அருகிலேயே சிப்காட் என்ற மிகப் பெரிய தொழிற்பேட்டை உள்ளது. இத்தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ராணிப்பேட்டை மாவட்ட தலைநகராகவும் உருவாகியுள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ராணிப்பேட்டையில் இருந்து மாநிலத் தலைநகரான சென்னைக்கு செல்வதென்றாலும், சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு வருவது என்றாலும் போதுமான பஸ் வசதிகள் இல்லை. பெரும்பாலான பஸ்கள் ராணிப்பேட்டை பைபாஸ் சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால் சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர்.

அவர்கள் வாலாஜாவில் இறங்கி வேறு பஸ் ஏறிதான் ராணிப்பேட்டைக்கு வரவேண்டும். ராணிப்பேட்டையில் இருந்து சென்னை செல்வதென்றால், வாலாஜா சென்று தான், சென்னை செல்லும் பஸ்சில் செல்ல வேண்டும். இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை தருகின்றது.

நகருக்குள் வந்து செல்ல வேண்டும்

வயதானவர்களும், பெண்களும், மற்றும் குடும்பத்துடன் சென்னை செல்பவர்களும் இதனால் பெரிதும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. வியாபார நிமித்தமாக சென்னை செல்லும் வியாபாரிகளும், சிரமப்படுகின்றனர்.

எனவே சென்னையிலிருந்து வரும் அனைத்து பஸ்களும் மாவட்ட தலைநகரான ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல வேண்டும். இதேபோல் வேலூரில் இருந்து சென்னை செல்லும் பஸ்களும், பிற பகுதிகளில் இருந்து ஆற்காடு வழியாக சென்னை செல்லும் பஸ்களும் ராணிப்பேட்டைக்குள் வந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்