மது போதை சோதனைக் கருவி சர்ச்சை - போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சரத்கர் விளக்கம்
மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சரத்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை பெருநகர காவல் துறையின் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தினசரி வாகனத் தணிக்கை மேற்கொண்டு, மது போதையில் வாகனம் ஓட்டுவர்களை 'பிரீத் அனலைசர்'(Breath Analyser) எனப்படும் மது போதை சோதனைக் கருவி மூலம் உடலில் ஆல்கஹால் அளவை சோதனை செய்கின்றனர்.
இந்த கருவி மூலம் வாகன ஓட்டிகளிடம் சோதனைகள் மேற்கொண்டு, மது போதையில் வாகனம் ஓட்டியவர்களை கண்டுபிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மூலம் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் மது அருந்தாத நிலையில், சோதனைக் கருவி மது அருந்தியதாக தவறாக காண்பித்ததால் போலிசாருக்கும் அவருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் மற்றொரு கருவி மூலம் சோதனை செய்ததில் அவர் மது அருந்தவில்லை எனவும் காண்பிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி சர்ச்சையானது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னையில் இன்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சரத்கர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர், "சம்பந்தப்பட்ட இளைஞரை பரிசோதை செய்ததில் முதலில் 45 மி.லி. என்ற அளவையும், மீண்டும் பரிசோதனை செய்த போது 0 மி.லி. என்ற அளவையும் காட்டியுள்ளது.
அந்த நபர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த சோதனை கருவியில் நிரந்தர பழுது ஏற்பட்டதாக தெரியவில்லை. ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கு சோதனை செய்கிறோம். இது குறித்து சோதனைக் கருவியின் தயாரிப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.