மது விருந்தில் தகராறு: ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை - 2 பேர் கைது

மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2022-06-02 08:20 GMT

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை 4-வது யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 34). ஆட்டோ டிரைவர். குடும்ப தகராறு காரணமாக இவருடைய மனைவி, மோகனை விட்டு பிரிந்து, அவருடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

கடந்த 30-ந் தேதி இரவு மோகன், தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த பிரபு (38), திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெபா என்ற ஜெயக்குமார் (34) மற்றும் மேலும் 2 நண்பர்களுக்கு தனது வீட்டில் மது விருந்து வைத்தார். நண்பர்கள் 5 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது ஜெயக்குமார், மோகனின் மனைவி குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன், நண்பர்களுடன் தகராறு செய்தார். தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மோகனை சரமாரியாக அடித்து உதைத்து கீழே தள்ளினர். இதில் படுகாயம் அடைந்த மோகன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மோகனின் அண்ணனான மணலியை சேர்ந்த செந்தில், தம்பியை பார்க்க வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் உள்ளே மோகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கொலையான மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபா என்ற ஜெயக்குமார், பிரபு ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்