இருளில் மூழ்கி கிடக்கும் அக்கரைப்பேட்டை மேம்பாலம்

மின்விளக்குகள் எரியாததால் அக்கரைப்பேட்டை மேம்பாலம் இருளில் மூழ்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.;

Update: 2022-11-16 18:45 GMT

மின்விளக்குகள் எரியாததால் அக்கரைப்பேட்டை மேம்பாலம் இருளில் மூழ்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அக்கரைப்பேட்டை மேம்பாலம்

நாகை அக்கரைப்பேட்டை கடுவையாற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. வேளாங்கண்ணிக்கு, நாகை கிழக்கு கடற்கரை வழியாகவும், அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து தெற்கு பொய்கைநல்லூர் வழியாகவும் செல்லலாம்.

சென்னை, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு பெரும்பாலானோர் இந்த அக்கரைப்பேட்டை மேம்பாலம் வழியாகத்தான் செல்வார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்தது

மேலும் அதன் அருகில் புகழ்பெற்ற கோரக்க சித்தர் பீடமும் உள்ளது. இந்த இடத்திற்கு நாள் தோறும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்றனர்.

இது தவிர இங்கு மீன்பிடி துறைமுகம் இருப்பதால் நள்ளிரவு 2 மணியில் இருந்தே ஏராளமான வியாபாரிகள் நாகை பகுதிக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு நாகையில் இருந்து அக்கரைப்பேட்டைக்கு செல்ல முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாலமாக உள்ளது.

இருளில் மூழ்கிக்கிடக்கிறது

முக்கியத்துவம் வாய்ந்த அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் பல மாதங்களாக மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. பாலத்தின் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் இரவு நேரத்தில் இந்த பாலம் இருளில் மூழ்கி கிடக்கிறது.

இந்த வழியாக செல்லும் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், வடக்கு, தெற்கு பொய்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

விபத்துகள் ஏற்படும் அபாயம்

இந்த பாலத்தின் அருகில் மீன்பிடித் துறைமுகம் இருப்பதால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் லோடு ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போது சிரமப்படுகின்றனர். குறிப்பாக நடந்து செல்பவர்களும், சைக்கிளில் செல்பவர்களும் இருளில் சாலை தெரியாமல் பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிடும் அபாயம் உள்ளது.

பாலம் இருள் சூழ்ந்து கிடப்பதால் இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. எனவே மேம்பாலத்தில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்து மின்விளக்குகளை ஒளிர செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்