ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல்; பெண்கள் உள்பட 139 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெண்கள் உள்பட 139 பேரை போலீசார் கைது செய்தனர்.;
புதுக்கோட்டை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் நேற்று காலை திரண்டனர். தேசியக்குழுவை சேர்ந்த நடராஜா தலைமையில் நிர்வாகிகள், தொழிலாளர்கள் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். டாஸ்மாக், ஆஷா, சுங்கச்சாவடி, பண்ணை, மின்வாரியம், உள்ளாட்சி துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.6 ஆயிரத்திற்கும் குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 60 பெண்கள் உள்பட 114 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் அறந்தாங்கி தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.