காற்று-ஒலி மாசு அதிகரித்தது

காற்று-ஒலி மாசு அதிகரித்தது.;

Update:2022-10-28 02:30 IST

காற்று-ஒலி மாசுபாடு

உச்சநீதிமன்றம் ஆணையின்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமங்கள் முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக 14 நாட்களுக்கு (தீபாவளிக்கு முன் 7 நாட்கள் மற்றும் தீபாவளிக்கு பின் 7 நாட்கள்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க அறிவுறுத்தியது. இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தப்பட்டது.

தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டு தாக்கத்தை, சுற்றுப்புற காற்றின் தரம் மற்றும் ஒலிமாசு அளவை கண்டறியும் பணியை திருச்சி மாநகரத்தில் தென்னூர் மற்றும் உறையூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டது. ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் கடந்த 18-ந் தேதியும், தீபாவளியன்று 24-ந் தேதியும் தில்லைநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 18-ந் தேதி குறைந்த அளவாக ஒலி மாசு தில்லைநகரில் 57.5 டெசிபலும், அதிக அளவாக 69 டெசிபலும் கண்டறியப்பட்டது.

காற்றுத்தர குறியீட்டு அளவு

ஆனால் தீபாவளியன்று 24-ந் தேதி குறைந்த அளவாக ஒலி மாசு தில்லைநகரில் 65.1 டெசிபலும், அதிக அளவாக 87.4 டெசிபலும் அளவிடப்பட்டது. மேற்கூறிய அளவிடப்பட்ட ஒலி மாசு அளவுகள் தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலிமாசுபாட்டின் அளவுகளை (பகல் நேரங்களில் 65 டெசிபல், இரவு நேரங்களில் 55 டெசிபல்) விட அதிக அளவாக இருந்தது.

தீபாவளி நாளான 24-ந் தேதி காற்றுத்தர குறியீட்டு அளவு காலை 6 மணி முதல் மறுநாள் 25-ந் தேதி காலை 6 மணி வரை 46-ல் இருந்து (மாசு படாதது) 130 வரை (மிதமான மாசுபட்டது) என கண்டறியப்பட்டது. குறைந்த அளவாக உறையூரிலும் (111), அதிகஅளவாக தென்னூரிலும் (130) கண்டறியப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பெருமளவில் பட்டாசு மற்றும் வாண வெடிகளை வெடித்ததே காரணம் ஆகும்.

பொதுமக்கள் ஒத்துழைக்க...

அன்றைய தினம் காற்றில் உருவாகிய அதிகமான ஈரத்தன்மையும், காற்றின் மிக குறைந்த வேகமும் பட்டாசு வெடித்ததனால் ஏற்படும் புகை வான்வெளியில் விரவுவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படவில்லை. இதுவே திருச்சி மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு 2022-ம் ஆண்டின் தீபாவளியன்று சற்று அதிகமானதற்கு காரணம். எனவே வரும் காலங்களில் தீபாவளி தினத்தில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் காற்றின் தரம் மற்றும் ஒலி மாசு அளவு மிகாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும்.

இந்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இரா.குணசீலன், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மு.மலையாண்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்