மாடம்பாக்கம் ஏரியில் கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளை சுற்றி படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள்

மாடம்பாக்கம் ஏரியில் கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீர், ஆகாய தாமரை செடிகளை அகற்றி ஏரியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-10-17 07:07 GMT

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் 2004-ம் ஆண்டு முதல் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 2019-ம் ஆண்டு சிட்லபாக்கத்துக்கு குடிநீர் வழங்க ரூ.3 கோடி செலவில் மாடம்பாக்கம்-சிட்லபாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.

இதற்காக மாடம்பாக்கம் ஏரியில் 5 கிணறுகள் தோண்டப்பட்டு தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் சிட்லபாக்கத்துக்கும், 2 லட்சம் லிட்டர் தண்ணீர் மாடம்பாக்கத்துக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சிட்லபாக்கம் பகுதியில் புதிதாக 842 தனி வீடுகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்பட மொத்தம் 3,286 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு தினமும் மாடம்பாக்கத்தில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது,

இந்தநிலையில் மாடம்பாக்கம் ஏரியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட கிணறுகளை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளது. அதிகளவிலான ஆகாயத்தாமரை செடிகளும் படர்ந்துள்ளதால் கிணற்று நீர் விஷத்தன்மையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிக்காமல் வெறும் குளோரினை மட்டும் கலந்து நேரடியாக தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாடம்பாக்கம் ஏரி குடிநீர் வழங்கப்பட்டு வருவதால் சிட்லபாக்கம் பகுதி பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக பி.ஐ.எஸ். தரத்தின்படி மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் சாக்கடை மாசினால் ஏற்படும் ஈக்காலி பாக்டீரியா இருக்க கூடாது. ஆனால் மாடம்பாக்கம் ஏரியில் இருந்து சாக்கடை கலந்த நீரையே குடிநீராக தாம்பரம் மாநகராட்சி வினியோகம் செய்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளை சூழ்ந்துள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடுகளுடன், குடிநீரும் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தாம்பரம் மாநகராட்சி மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் இந்த திட்டத்தில் ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும், கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளை சுற்றி படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி விஷத்தன்மை இல்லாத குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்