அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு:எங்கள் இலக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே- ஜி.கே வாசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.;
சென்னை
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், இன்று த.மா.கா. தலைவர் வாசனை சந்தித்து பேசினர். அ.திமுக சார்ப்பி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பா. வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து ஜி.கே. வாசன் கூறியதாவது:-
கடந்த முறை நாங்கள் போட்டியிட்டோம்; இம்முறை அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்
எங்கள் இலக்கு கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பது தான். வெற்றி வியூகத்தை வகுக்கவே அ.திமு.க மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை.திமு.க அரசுக்கு எதிர்மறையான வாக்குகள் நாளுக்கு நாள், நொடிக்கு நொடிக்கு அதிகரித்து கொண்டே வருகின்றன.
இரண்டொரு நாளில் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம்.கூட்டணி தலைவர்களோடு பேசி வேட்பாளரை முடிவு செய்வோம். இடைத்தேர்தல் மட்டுமின்றி தமிழக் அரசியல் நிலவரம் குறித்து பேசினோம் என கூறினார்.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் சிக்கல் உள்ளதால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நெருக்கடி த.மா.கா.வுக்கு உள்ளது.