அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது..
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும். அந்த வகையில் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படலாம் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்ல வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.