அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக செல்வகணபதி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
சென்னை,
1991-96-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.செல்வகணபதி. தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அதேவேளையில் கூட்டு சதி குற்றச்சாட்டில் இருந்து அவர்களை விடுதலை செய்தது.
கூட்டு சதி குற்றச்சாட்டில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்தநிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்தும், வழக்கில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோரை விடுதலை செய்தும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.