மதுரையில் விவசாய கண்காட்சி தொடங்கியது

மதுரையில் விவசாய கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி 22-ந்தேதி வரை நடக்கிறது. இதனை விவசாயிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Update: 2022-08-19 20:43 GMT

மதுரையில் விவசாய கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி 22-ந்தேதி வரை நடக்கிறது. இதனை விவசாயிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

விவசாய கண்காட்சி

மதுரை அனுப்பானடி வேலம்மாள் மருத்துவமனை அருகில் உள்ள 'ஐடா ஸ்கட்டர்' அரங்கில் 'யுனைடெட் அக்ரிடெக் 2022' என்ற தலைப்பில் மாபெரும் விவசாய கண்காட்சி நேற்று காலை தொடங்கியது. இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயத்திற்கு தேவையான கருவிகள், நடவு முதல் அறுவடை வரை தேவையான எந்திரங்கள், களை எடுப்பு எந்திரங்கள், கதிர் அறுவடை செய்யும் எந்திரங்கள், டிராக்டர்கள், சோலார், உயர்தர நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பம்புகள், மோட்டார்கள், பாரம்பரிய நெல் மணிகள், விதைகள், செல்போன் மூலம் கேட்வால்வுகளை இயக்கும் நவீன தொழில்நுட்பம், இயற்கை விவசாய முறைகள், மாடித்தோட்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். இதுபோல், விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள் குறித்து விரிவான தகவல் கொடுக்க வேளாண்மை அலுவலர்கள், வங்கிகள் அலுவலர்கள் கண்காட்சியில் பணியில் இருக்கிறார்கள். கண்காட்சியில் விவசாயிகள் வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

சிறப்பு பஸ்கள், அனுமதி இலவசம்

வருகிற 22-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பார்வையிடலாம். அனுமதி இலவசம். விவசாயிகளின் வசதிக்காக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்களில் இருந்து போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

கண்காட்சி திறப்பு விழாவில், மதுரை வேளாண்மை கல்லூரி முதல்வர் மகேந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் விவேகானந்தன், விவசாய சங்க தலைவர் செல்லமுத்து, யுனைடெட் டிரேட் பேர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் பாக்கியராஜ், முன்னோடி விவசாயி தர்மராஜ், பெரியாறு வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராமன், நஞ்சை-புஞ்சை விவசாயிகள் சங்க தலைவர் பொன்.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்