விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தொப்பம்பட்டி ஒன்றியக்குழு சார்பில், பழனி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.;
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தொப்பம்பட்டி ஒன்றியக்குழு சார்பில், பழனி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள்செல்வன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, மா.கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கனகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் மற்றும் தொப்பம்பட்டி பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
தொப்பம்பட்டி, சின்னவேலம்பட்டி, தும்பலப்பட்டி, வில்வாதம்பட்டி உள்பட 8 கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தும்பலப்பட்டி உபரிநில விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பான மனுக்களை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அளித்து செல்ல அறிவுறுத்தினர். அதன்பேரில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், பழனி ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்று கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.