நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-10 14:36 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இலைக்கருகல் நோய்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1500 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த பயிர் தற்போது வளர்ச்சி பருவத்தில் உள்ளது. இந்த நெற்பயிரில் பரவலாக பாக்டீரியா இலைக்கருகல் நோய் தென்படுகிறது. மேற்படி நோய் பாதித்த தென்திருப்பேரை வட்டாரம் கடம்பாகுளம் பாசன பகுதிகளை தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் தலைமையில் வேளாண்மை துணை இயக்குநர் பழனிவேலாயுதம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி பேராசிரியர் ரஜினிமாலா மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் நோயை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை தெரிவித்து உள்ளனர்.

அதன்படி இந்த நோய் பாக்டீரியா தாக்குதலால் ஏற்படுகிறது. இந்த நோய் பாதித்த நெற்பயிர்களில் தூர் கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் அறிகுறிகள் காணப்படும். முதலில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பின் நோய் தாக்குதலில் இலைகள் கருகியது போன்று தோன்றும். இலைக்கருகல் அறிகுறியின் ஆரம்ப நிலையில் லேசான மஞ்சள் நிறப்புள்ளிகள் இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றும். இதனால் இலை நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகிறது.

இத்தகைய தாக்குதல் விளிம்புகளின் வழியே பரவி இலையுறைக்கும் பரவும். நோய் தீவிரமாகும் போது வயல் மேற்பரப்பில் இலைகள் காய்ந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

இந்த நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் என்ற உயிரியல் கட்டுப்பாட்டு மருந்தை கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும். நாற்றுகளின் வேரினை சூடோமோனாஸ் மருந்து கலந்த தண்ணீரில் நனைத்து நடவு செய்தல் மற்றும் நட்ட 40 மற்றும் 50-ம் நாளில் இலை வழியாகத் சூடோமோனசை தெளித்தல் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரியா மூலம் மூன்று அல்லது நான்கு முறையாக பிரித்து மேலுரமாக இடலாம். யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து ஒரு நாள் வைத்திருந்து மறுநாள் மேலுரமாக இட வேண்டும். நோய் தாக்குதல் அதிகரிக்கும் போது விவசாயிகள் காப்பர் ஹைட்ராக்சைடு (கோசைட்) என்ற மருந்தை ஏக்கருக்கு 500 கிராம் வீதம் (1 லிட்டருக்கு 2.5 கிராம்) 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் கொண்டு பயிர் நன்கு நனையும்படி தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்