அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை

கழுகாசலமூர்த்தி கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை நடைபெற்றது.;

Update: 2023-05-29 19:00 GMT

கழுகுமலை:

கழுகுமலையில் பிரசித்தி பெற்ற கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளது. கோடை காலத்தில் வெயிலின் வெப்பம் மற்றும் மலையினுடைய வெப்பம் அதிகம் காணப்படுவதால், அங்குள்ள குமார தெப்பத்தில் இருந்து நீர் எடுத்து வந்து கருவறையை சுற்றி 2 அடி உயரத்தில் நீர்நிரப்பப்படுகிறது. இதனால் கழுகாசலமூர்த்தி வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைகிறார். இந்நிகழ்வு வேறு எந்த திருத்தலத்திலும் நடைபெறாத ஒன்றாகும். இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் வெயிலின் தாக்கம் 25 நாட்கள் வரை இருந்தது. இந்த நாட்களில் கருவறையில் நீர் நிரப்பப்பட்டு வந்தது. நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நாளில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. 10 மணியளவில் குமார தெப்பத்தில் இருந்து 13 கும்பங்களில் நீர் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை செல்லக்கண்ணு பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். இரவில் 8 மணியளவில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்