கே.வி.குப்பம் அருகே திடீரென வைக்கப்பட்ட அக்னி கலசம்
கே.வி.குப்பம் அருகே திடீரென வைக்கப்பட்ட அக்னி கலசத்தை அகற்ற சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கே.வி.குப்பம் பகுதியில் குடியாத்தம்- காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சந்தை மேட்டில் உள்ள சாலையின் ஓரம் அளவீடு செய்யப்பட்டது. அப்போது சாலை ஓரம் பா.ம.க. கொடிக்கம்பம் இருந்த இடத்தில் நேற்று முன்தினம் புதிதாக வைக்கப்பட்ட அக்னி இருந்தது. அதை அகற்ற வேண்டும், இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்து கட்சியினர் ஒன்று திரண்டு வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் கீதா, துணை தாசில்தார் சங்கர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அக்னி கலசத்திற்கு வெள்ளை அடித்து, மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து கட்சியினர் சென்றனர்.