காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம்-சமையல் பாத்திரங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

சாலை, மயான வசதி செய்து தர வலியுறுத்தி காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது சமையல் பாத்திரங்களுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-12-21 22:28 GMT

ஓமலூர்:

காத்திருக்கும் போராட்டம்

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பெத்தேல் காலனியில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு சாலை வசதியும், மயான வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை மனுக்கள் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் சாலை மற்றும் மயான வசதி செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

பாத்திரங்களுடன் ஆர்ப்பாட்டம்

தாலுகா அலுவலகம் முன்பு திரண்டவர்கள் தங்களது வீடுகளில் இருந்த பாத்திரங்களை எடுத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வயதான முதியவர் ஒருவரை கட்டிலில் படுக்க வைத்து தூக்கி வந்தும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகராஜா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் குழந்தைவேல், மாவட்ட செயலாளர் இளங்கோ, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வேல்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் தமிழரசி, ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் சுந்தர்ராஜ், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா காளீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், ெதால்காப்பியன் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 27-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்திய உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்