திருவாலி ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்
திருவாலி ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்
2,500 ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் திருவாலி ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலி ஏரி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பழம்பெரும் ஏரிகளில் ஒன்றாக விளங்கும் இந்த ஏரியில் திருநகரி, நப்பத்தூர், புதுத்துறை, திருவாலி மற்றும் கீழசட்டநாதபுரம் பகுதிகளில் 2500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேற்கண்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் திருவாலி ஏரி விளங்குகிறது. 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளின் இந்த ஏரி பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஏரி முழுவதும் காட்டாமணக்கு, ஆகாயத்தாமரை செடிகள் மண்டி கிடக்கின்றன.
இதன் மூலம் பாசனம் பெறும் கிராமங்களுக்கு நீர் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே திருவாலி ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, விரைவில் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர் பாய்ச்சுவதில் சிரமம்
இதுகுறித்து திருவாலி ஏரியின் முன்னோடி விவசாயி திருமாறன் கூறுகையில்,
இந்த ஏரியை நம்பி கிட்டத்தட்ட 1000 விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் காட்டாமணக்கு மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து உள்ளதால், ஏரி முழு கொள்ளளவுக்கு நீர் நிரம்பவில்லை. மேலும் நீர் செல்லும் வாய்க்கால்களிலும் ஆக்கிரமித்து உள்ளதால் நீர் செல்வதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் சம்பா சாகுபடி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் சிரமப்படுகின்றனர். இந்த ஆகாயத்தாமரை செடிகளில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளதால் தங்கள் விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்
கடந்த ஒரு மாதத்தில் ஐந்து விவசாயிகள் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். இந்த ஆகாயத்தாமரை காட்டாமணக்கு செடிகளை அகற்றக்கோரி விவசாயிகள் பலமுறை பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயிகள் நலன் கருதி ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
குடிநீர் மாசுபடும் சூழ்நிலை
முன்னோடி விவசாயி நடராஜன் கூறுகையில்,
திருவாலி ஏரி மூலம் கடலோர கிராமங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள விவசாய நிலங்கள் மிகவும் பயனடைந்து வருகின்றன. ேமலும் கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த ஏரியை வருகிற கோடை காலத்தில் முழுமையான அளவிற்கு தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த ஏரியில் தற்போது ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த ஏரியின் நீர் குடிநீர் ஆதாரமாக காணப்படுவதால், செடிகள் மூலம் குடிநீர் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் மாசுபடக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறைக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.