நடுக்கடல் மணல் திட்டில் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 ேபர் மீட்பு
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து நடுக்கடல் மணல் திட்டில் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.;
தனுஷ்கோடி,
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து நடுக்கடல் மணல் திட்டில் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.
மணல் திட்டில் தவிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஏற்கனவே 209 பேர், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே கடலின் நடுவே உள்ள 1-வது மணல் திட்டு பகுதியில் அகதிகள் சிலர் தவிப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற கடலோர போலீசார், 5 பேரையும் படகில் ஏற்றி தனுஷ்கோடி அழைத்து வந்து, அதன் பின்னர் மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இலங்கை கிளிநொச்சி வன்நேரிகுளம் பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 34), இவருடைய மனைவி ரஜிந்தி (29), மகள்கள் கஜானா (13), டயானா (11), மகன் சாட்சிசன் (6) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கணேசமூர்த்தி கூறியதாவது:-
ரூ.2 லட்சம்
இலங்கையில் இன்னும் விலைவாசி குறையவில்லை. வேலைவாய்ப்பும் இல்லை. எனவே கிளிநொச்சியில் இருந்து மன்னார் பகுதிக்கு குடும்பத்தோடு வந்தேன்.
பின்னர் அங்கிருந்து தலைமன்னார் வந்து, அங்கிருந்து படகு ஏற்பாடு செய்து 2 படகோட்டிகள் எங்களை அழைத்து வந்தனர். அதற்காக நகைகளை விற்று ரூ.2 லட்சம் கொடுத்தேன். படகோட்டிகள் எங்களை தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டு பகுதியில் இறக்கிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணைக்கு பின்னர் 5 பேரும், மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள தனித்துணை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.