மீண்டும், மீண்டும் அமைச்சர் தவறாக கூறுவது வேதனை அளிக்கிறது: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது வக்கீல் சந்திரசேகரன் பேட்டி

மீண்டும், மீண்டும் அமைச்சர் தவறாக கூறுவது வேதனை அளிப்பதாகவும், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்றும் வக்கீல் சந்திரசேகரன் கூறினார்.

Update: 2022-11-10 18:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் நடராஜர் கோவிலை மன்னர்கள் தான் எழுப்பினார்கள் என்றும், தீட்சிதர்கள் கட்டவில்லை என்றும், கோவில் இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் வக்கீல் ஜி.சந்திரசேகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறையினர் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் உள்ள பொதுதீட்சிதர்களுக்கு தொடர்ந்து இடையூறு செய்து சட்டத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்கு பொதுதீட்சிதர்கள் சார்பில் ஆட்சேபனையும், பதில்களும் அளிக்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் பொதுவெளியில் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விசாரிப்பதில் உள்நோக்கம்

குறிப்பாக ஒரு மாத காலத்தில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சில கைது நடவடிக்கையும், மனித உரிமை மீறல்களும், சிறார்களை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டது குறித்து பொதுவெளியில் தீட்சிதர்கள் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் அனைத்தும் தமிழக அரசு விசாரிப்பதில் உள்நோக்கம் உள்ளது என தெரிவிக்கப்பட்டு நடுநிலையான பாரபட்சமின்றி புலன் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள் தேசிய குழந்தைகள் நல வாரியத்திற்கு கடிதமும் அனுப்பி உள்ளார்கள்.

தீட்சிதர்களுக்கு சொந்தமானது

நாங்கள் கடைசியாக 3-ந் தேதி அனுப்பி உள்ள பதில் கடிதத்தில் மிக தெளிவாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்பதற்கு உரிய ஆவணத்தை அளித்தோம்.

முக்கியமாக தென்னாற்காடு மாவட்ட அரசிதழ் 1878-ம் ஆண்டில் அப்போதைய மாவட்ட கலெக்டர் வெளியிட்டதை தெளிவாக குறிப்பிட்டு, அதன் பிரகாரம் தீட்சிதர்கள் கோவிலுக்கு பாத்தியமானவர்கள் என்பதை தெரிவித்துள்ளோம். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளன என்று தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியுள்ளோம்.

சட்ட ரீதியாக நடவடிக்கை

ஆனால் நாங்கள் கொடுத்த பதிலை சிறிதும் ஏற்காமல் மீண்டும், மீண்டும் தவறான வகையில் பொதுவெளியில் தீட்சிதர்களுக்கு கோவில் சொந்தமானது அல்ல. நாங்கள் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறுவது மிக வேதனைக்குரியதாகும்.

இந்து சமய அறநிலையத்துறை மீண்டும் கோவில் நிர்வாகத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்ற அவமதிப்பு குறித்து அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வோம். சட்ட ஆலோசகர்களை கலந்தாலோசித்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்