பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.;
சென்னை,
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் சென்னை திரும்பி வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் நகருக்குள் நுழைவதால் தாம்பரம் - ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், பெருங்களத்தூர் பகுதியில் ஆம்னிபேருந்துகள் பயணிகளை இறக்கி விடுவதால் அங்கு பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் வசதிக்காக இலவச மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வண்டலூர், கிளாம்பாக்கம் பகுதிகளில் வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. அங்கு எதிர்பார்த்ததை விட பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.