ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்தை இழந்ததால் மில் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்தை இழந்ததால் தனியார் மில் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
கோபி
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்தை இழந்ததால் தனியார் மில் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் மில் அதிகாரி
ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 34). இவருடைய மனைவி கீதா (34). காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி கோபி அருகே கொளப்பலூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் செல்போனில் ஆன்-லைனில் ரம்மி விளையாடி வந்ததாக தெரிகிறது.
ரூ.5 லட்சத்தை இழந்தார்
கிருஷ்ணமூர்த்தி கடந்த 6 மாதத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.5 லட்சத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் அடிக்கடி மனைவியிடம் புலம்பி வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தோட்டத்துக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அங்கு சென்றதும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, அங்குள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டுக்கொண்டார்.
உறவினர்கள் சோகம்
இதைப்பார்த்த அக்கம் பக்கத்து தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஓடிச்சென்று கிருஷ்ணமூர்த்தியை மீட்டு கீதாவுக்கு தகவல் கொடுத்தார்கள்.
பதறி அடித்து ஓடிவந்த கீதா உறவினர்கள் உதவியுடன் கணவரை சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.5 லட்சத்தை இழந்ததால் தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.