ஸ்ரீவைகுண்டம் அருகே 2 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு 45 ஆடுகள் திருட்டு
ஸ்ரீவைகுண்டம் அருகே 2 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு 45 ஆடுகள் திருடி சென்ற ஆறு பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு 45 ஆடுகளை திருடிய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆடுகள் வளர்ப்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான தோட்டம் தாதன்குளம் காட்டுப்பகுதியில் கல்குவாரிக்கு செல்லும் வழியில் உள்ளது.
இந்த தோட்டத்தில் மாரியப்பன், தாதன்குளத்தைச் சேர்ந்த அருணாசலம், கருங்குளத்தைச் சேர்ந்த பேச்சியப்பன் ஆகியோருக்கு சொந்தமான் 350-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகளை அருணாசலம் மற்றும் பேச்சியப்பன் ஆகியோர் தோட்டத்தில் தங்கி பராமரித்து வருகின்றனர்.
தினமும் காலையில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, மாலையில் தோட்டத்தில் அடைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு தோட்டத்திற்கு வந்தன. அவற்றை தோட்டத்தில் அடைத்துவிட்டு, அருணாசலமும், பேச்சியப்பனும் அங்குள்ள ஒரு அறையில் தங்கினர்.
2 பேருக்கு அரிவாள் வெட்டு
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் தோட்டத்திற்குள் 6 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அப்போது ஆடுகளின் சத்தம் கேட்டு, அருணாசலமும், பேச்சியப்பனும் வெளியில் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது இருளில் மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதுடன், அறையில் அடைத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் ஒரு மினிவேனை தோட்டத்திற்குள் கொண்டு வந்து தோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த 45 ஆடுகளை திருடிக் கொண்டு தப்பி ெசன்று விட்டனர். காலை 5 மணிக்கு அவர்கள் அறையில் இருந்து தப்பி சென்று ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.
6பேர் கும்பலுக்கு வலைவீச்சு
அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன், செய்துங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் சேரகுளம் போலீசார் சம்பவ தோட்டத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கும்பலை தேடிவருகின்றனர்.