காய்கறி வியாபாரியை தாக்கிவிட்டுமனைவி, குழந்தையை ஆட்டோவில் கடத்திய கும்பல் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

நாகர்கோவிலில் காய்கறி வியாபாரியை தாக்கிவிட்டு மனைவி மற்றும் குழந்தையை ஆட்டோவில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update: 2023-03-29 22:22 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் காய்கறி வியாபாரியை தாக்கிவிட்டு மனைவி மற்றும் குழந்தையை ஆட்டோவில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வியாபாரி மீது தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் நாகர்கோவிலில் தங்கி உள்ளார். அந்த வாலிபர் நாகர்கோவிலில் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனக்கு சொந்தமான ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு இடலாக்குடி ஆணைப்பாலம் பகுதியில் அந்த வாலிபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வேறொரு ஆட்டோ ஒன்றில் 4 பேர் கொண்ட கும்பல் இருந்தனர். அந்த கும்பல் திடீரென வாலிபர் ஓட்டி சென்ற ஆட்டோவை வழிமறித்தனர். பின்னர் அந்த கும்பல் அந்த வாலிபரை தாக்கினர். இதனால் வலி தாங்க முடியாமல் அந்த வாலிபர் 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என அபாய குரல் எழுப்பினார். அதேசமயம் அவரது மனைவியும் சத்தமிட்டார்.

ஆட்டோவில் கடத்தல்

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர் ஓடி வந்தனர். இதனை கண்ட அந்த கும்பல், நாலா பக்கமாக தப்பி ஓடினர். அந்தக் கும்பலை சேர்ந்த ஒருவர் மட்டும் திண்டுக்கல் வாலிபரின் மனைவி மற்றும் 2 குழந்தைகளை ஆட்டோவில் வைத்தே கடத்தி ஓட்டிச் சென்றார். அப்போது காயப்பட்ட கணவர், ஓடி சென்று அந்த ஆட்டோவில் ஏறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆட்டோ அங்கிருந்து வேகமாக சென்றது.

இதனிடையே நாலாபுறமாக ஓடியவர்களில் ஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த நபரை மீட்டனர். தொடர்ந்து அவரை கோட்டார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடன் வாங்கியதால்..

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த திண்டுக்கல் வாலிபர் தனியார் நிறுவனத்தில் வாகன கடன் வாங்கி செலுத்தாததால் வாகன பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இரவில் காய்கறி வியாபாரி தாக்கிவிட்டு மனைவி மற்றும் குழந்தையை ஆட்டோவில் கடத்திய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்