போலீஸ் விசாரணைக்கு பயந்து: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.;

Update:2022-08-23 17:41 IST
போலீஸ் விசாரணைக்கு பயந்து: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை அயனாவரம் என்.எம்.கே. தெருவைச் சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவருடைய தந்தை இறந்து விட்டார். தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். விஜய், அதே தெருவில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தின் சர்வீஸ் மையத்தில் வேலை செய்து வந்தார்.

விஜய், கடந்த 4 வருடங்களாக தான் வேலை செய்து வந்த கடையில் உள்ள உதிரி பாகங்களை திருடி அதை பல்வேறு இடங்களில் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கடையின் பொது மேலாளர் திலீப் என்பவர் விஜய் மீது அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் போலீஸ் விசாரணைக்கு பயந்த விஜய், நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் விஜய் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அதில் தற்கொலை செய்வதற்கு முன்பு விஜய், தனது தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அதில். "நான் செய்த தவறுக்காக பொதுமேலாளர் திலீப், அனைவருக்கும் முன்பு என்னை அடித்ததால் ஏற்பட்ட அவமானத்தில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அம்மா நீ எதற்கும் கலங்க வேண்டாம். மேலே சென்று அப்பாவுடன் சேர்ந்து உன்னை பார்த்து கொள்வேன்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்