திருச்சி மத்திய சிறையை வக்கீல்கள் முற்றுகை

திருச்சி மத்திய சிறையை வக்கீல்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-12-06 21:10 GMT

சிறையில் இன்டர்காம் வசதி

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, உறவினர்களோ திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மனு போட்டு பார்க்க முடியும். ஆனால் ஒரே அறையில் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் ஒருபுறமும், மற்றொரு புறம் அவர்களுடைய உறவினர்களும் நடுவே உள்ள கம்பிகளுக்கு இருபுறமும் பேசும்போது ஏற்படும் அதிக இரைச்சலால் பேசுவதை தெளிவாக கேட்க முடியாத நிலை இருந்தது.

இதனை தவிர்க்கும் வகையில் கைதிகள் குடும்பத்தினருடன் பேச இன்டர்காம் வசதி செய்யப்பட்டது. திருச்சி மத்திய சிறையில் இருபுறமும் தலா 22 இன்டர்காம் கருவிகளை வைத்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று பகல் ஒரு சில கைதிகளிடம் பேசுவதற்காக அவர்களுடைய வக்கீல்கள் திருச்சி சிறைக்கு சென்றனர். அங்கு வக்கீல்களும் இன்டர்காம் மூலம் மட்டுமே பேச வேண்டும் என்றும், கைதிகளை தனியாக சந்தித்து பேச அனுமதிக்க முடியாது என்றும் சிறை தரப்பில் கூறியதாக தெரிகிறது.

வக்கீல்கள் போராட்டம்

இதை கண்டித்து வக்கீல்கள் சிறை வாசல் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல்கள் கூறுகையில், வழக்கு தொடர்பாக சில தகவல்களை கைதிகளிடம் நாங்கள் தனிப்பட்ட முறையில் கேட்க வேண்டும். அதை இன்டர்காமில் பேசினால் அது வழக்கிற்கு பின்னடைவாக அமைந்துவிடும்.

அவ்வாறு வக்கீல்கள் இன்டர்காம் மூலம்தான் பேச வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தால் அந்த உத்தரவை சிறை அதிகாரிகள் காட்ட வேண்டும் என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளதாக கூறிவிட்டு இரவு 9.45 மணி அளவில் வக்கீல்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால் நேற்று திருச்சி மத்திய சிறை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்