கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்த கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்த அறிவுரை
கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்த கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என ஆடி மாத பவுர்ணமியையொட்டி முன்னேற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை வழங்கினார்;
திருவண்ணாமலை,
கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்த கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என ஆடி மாத பவுர்ணமியையொட்டி முன்னேற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 2-ந் தேதி (புதன் கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ள பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-
திருவண்ணாமலைக்கு பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு 2 நாட்கள் அனைத்து துறை அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் கூடுதலாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல் தனியார் பஸ் உரிமையாளர்களை அழைத்து பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்காக இந்த முறை கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த பவுர்ணமி அன்று வருகை தந்த பக்தர்களை விட இந்த பவுர்ணமிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த முறை முதல்நிலை அலுவலர்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை தொய்வின்றி சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும்.
இலவச தரிசனம்
பவுர்ணமி தினத்தன்று 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். பவுர்ணமி தினத்தன்று சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கு இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். குப்பைகளை அகற்றுதல், நகரத்தை தூய்மையாக வைத்திருக்க அதிக தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு கடைகள் அமைப்பவர்களை அகற்ற வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலமாக தடையில்லாத மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியர்ஷினி, இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் இணை ஆணையர் சி. ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜராம் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.