வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் மனு
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.;
கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் நேற்று ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி தெரியாதவர்கள் (வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் குறிப்பிட்ட இடத்தில் வசிக்காதவர்கள்), இரட்டை பதிவு (ஒரே நபரின் பெயர் 2 இடங்களில் அதே வாக்காளர் பட்டியலில் உள்ளது) தொடர்பான புகாரினை 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடமும், அப்போதைய கரூர் மாவட்ட கலெக்டரிமும் புகார் மனுவாக கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலும், பெயர்களை முழுமையாக நீக்கம் செய்யாமல், தொடர்ந்து அவர்களின் பெயர்கள் கடைசியாக வெளியிடப்பட்டுள்ள (30.5.2023) வாக்காளர் பட்டியலிலும் உள்ளது.எனவே முறையாக அந்தந்த வாக்குச்சாவடிக்கான பூத் லெவல் ஆபிசர் நேரடியாக கள ஆய்வு செய்து, இறந்தவர்கள், இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்தும், முகவரி தெரியாத நபர்கள் பலர் குறிப்பிட்டுள்ள பூத்களில் உள்ளவரா அல்லது வேறு பகுதிக்கு வீடு மாறி சென்று விட்டார்கள் என்றால் அவற்றையும் சரிபார்த்து, சரியான விவரங்களுடன் கூடிய வாக்காளர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.