அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு..?
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டுக்கே அனுப்பி, வழக்கை 2 வாரங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதி முன் பட்டியலிட்டபோது, ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை விசாரிக்க புதிய நீதிபதியை நியமிக்கும்படி தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரைத்தார்.
அதன்படி புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜெயச்சந்திரன் கடந்த 10, 11 என இரு நாட்கள் தீவிர விசாரணை நடத்தி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்பட இருப்பதாக ஐகோர்ட்டு பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த வழக்கு ஐகோர்ட்டு வலைதளத்தில் அதிகாரப்பூர்வமான தீர்ப்பு வெளியாகும் தேதியை குறிப்பிடும் பட்சத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்படுமா என்பது தெரியவரும்.