அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

ஆற்காடு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-05-16 18:42 GMT

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த புது மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 43). அ.தி.மு.க பிரமுகரான இவர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். ஜெகநாதன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் குடும்பத்துடன் தூங்கி உள்ளார்.

அவரது தாய் சாவித்திரி தரைத்தளத்தில் உள்ள அறையில் தூங்கி இருக்கிறார். நேற்று அதிகாலை ஜெகநாதன் கீழே இறங்கி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தரைத்தளத்தில் உள்ள அறைகளுக்கு சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள், புடவைகள் கீழே சிதறி கிடந்தன.

60 பவுன் நகை திருட்டு

பீரோவில் வைத்திருந்த செயின், மோதிரம், கம்மல், நெக்லஸ், வளையல், ஆரம் உள்ளிட்ட 60 பவுன் நகைகள், டம்ளர், குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு உள்ளிட்ட 750 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

நகைகளை திருடிய மர்ம நபர்கள் நகை வைத்திருந்த டப்பாக்கள் மற்றும் பர்சுகளை வீட்டின் அருகே வீசிச் சென்றுள்ளனர்.

உடனடியாக இது குறித்து ஜெகநாதன் ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்