அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் -திருச்சியில் சீமான் பேட்டி

அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால் தி்.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டதுபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று திருச்சியில் சீமான் கூறினார்.

Update: 2023-08-25 19:19 GMT

அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால் தி்.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டதுபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று திருச்சியில் சீமான் கூறினார்.

திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

மேகதாதுவில் அணை

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். தேர்தலில் வென்றபிறகு ஆட்சியாளர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும். அதிகாரத்துக்கு வந்தபிறகு அடுத்த தேர்தலை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கக்கூடாது. இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த, கச்சத்தீவை தாரைவார்த்த, என தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

காங்கிரஸ் தான் முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தது. அப்போதே இந்த சட்டத்தை தி.மு.க. தடுத்து இருக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவோம் என்று கூறுகிற கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?. வருகிற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் இடங்களில் தி.மு.க. நேரடியாக களம் இறங்குவதாக முடிவு எடுப்பார்களா?.

தேர்தலில் தனித்துப்போட்டி

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தியதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை. இதுபோன்ற மாநாடு நடத்துவதால் அவர்கள் கட்சிக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும். அ.தி.மு.க. என்ற கட்சி எம்.ஜி.ஆரிடம், இருந்து, ஜெயலலிதாவிடம் இருந்து தற்போது எடப்பாடி பழனிசாமியிடம் வந்துள்ளது என்பதை காட்டுவதற்கு வேண்டுமானால் இந்த மாநாடு உதவும். எனக்கு தெரிந்து புரட்சி தமிழர் என்றால் நடிகர் சத்யராஜை தான் அப்படி அழைப்போம்.

ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி கொண்டு இருக்கிறோம். எங்கள் கொள்கை முடிவுப்படி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். எங்கள் கொள்கையை ஏற்று யாராவது கூட்டணிக்கு வந்தால் கூட்டணி வைப்பது குறித்து பார்க்கலாம்.

சொத்துப்பட்டியல்

அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால், தி.மு.க அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டதுபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலையும், ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு பற்றியோ, கோடநாடு கொள்ளை வழக்கைப்பற்றியோ பா.ஜ.க.வினர் பேசுவதே இல்லையே. கோடநாட்டில் கொலை நடந்ததா? இல்லையா?.

கோடநாடு வழக்கை விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வரணும் என்று ஏன் பேச மறுக்கிறீர்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துவிட்டால் அவர்கள் எல்லாம் புனிதராகி விடுவார்களா?. தமிழகத்தின் உரிமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எனக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். அதற்கு என் கட்சியை சேர்ந்த 10 பேர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். இதற்காக தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்