அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனம் -எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
மதுரையில் 20-ந் தேதி நடக்கும் அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேலம்,
மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டலம் சார்பில் தயார் செய்யப்பட்ட பிரசார வாகனத்தை நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள்
இந்த பிரசார வாகனத்தில், 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு- மதுரை' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், மாநாட்டின் தொடக்க பாடலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த பிரசார வாகனம் வருகிற 20-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறது.
அப்போது மதுரை மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனத்தில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் செல்ல உள்ளதாகவும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.