அ.தி.மு.க. பொதுக்குழு ஜூலை 11-ந் தேதி நடக்காது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி

ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்காது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஆர்.வைத்திலிங்கம் கூறினார்.

Update: 2022-06-26 21:22 GMT

தஞ்சாவூர்,

பொதுக்குழுவுக்கு பிறகு தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு உயர்ந்து உள்ளது. பொதுக்குழுவுக்கு ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் செல்வதற்கு முன்பே காலை 6 மணிக்கே பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லாத 600 பேரை முன்னால் அமர வைத்து விட்டனர். அவர்கள்தான் கூச்சல் போட்டனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் எந்த வார்த்தையும் பேசவில்லை. அவர்கள் கொண்டு வந்த பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லாத ஆட்கள்தான் அந்த நிகழ்வுக்கு (கூச்சல்- குழப்பத்துக்கு) காரணம். ஒரு கட்சியின் ஜனநாயகத்துக்கு புறம்பாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் அந்த பொதுக்குழுவை நடத்தினார்கள்.

பொதுக்குழு நடக்காது

நீதிமன்றம் கூறிய அறிவுரையை கேட்காமல் தீர்மானம் கொண்டு வந்ததால் அது தவறு என கூறிவிட்டு நாங்கள் வெளிநடப்பு செய்தோம். எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்ற பொதுக்குழு உறுப்பினர்கள் தற்போது எங்கள் பக்கம் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்காது. மதுரையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த தஞ்சை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரை.வீரணன் நேற்று வைத்திலிங்கத்தை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தார்.

அ.ம.மு.க. பிரமுகருடன் சந்திப்பு

முன்னதாக தஞ்சையில் நடந்த ஒரு திருமணத்தில் பங்கேற்ற ஆர்.வைத்திலிங்கமும், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமியும், ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்