அ.தி.மு.க. தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு செல்வது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அதிக அளவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செல்வது குறித்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மாநாட்டிற்கு கட்சி தொண்டர்களைத் தவிர வேறு ஆட்களை அழைத்து வர கூடாது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை மாநாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாம் தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் உற்சாகத்துடன் செயல்படுவதை பார்த்து மற்ற கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வெல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.