விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 375 பேர் கைது செய்யப்பட்டனர்;
விழுப்புரம்
அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்தும், எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக வாபஸ் வாங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நேற்று அ.தி.மு.க.வினர் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம் காந்தி சிலை அருகில் நேற்று காலை 10.20 மணியளவில் நகர அ.தி.மு.க. செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாததால் சாலை மறயலில் ஈடுபட்ட நகர செயலாளர்கள் மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, இணை செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் ரகுநாதன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கோலியனூர்
இதேபோல் கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 75 பேரும், கண்டமங்கலம் ரெயில்வே கேட் அருகில் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரும், வளவனூரில் நகர செயலாளர் முருகவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டியில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் தாலுகா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர்கள் எசாலம் பன்னீர், முகுந்தன், நகர செயலாளர் பூர்ணராவ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், ஒன்றிய பேரவை செயலாளர்கள் சரவணகுமார், ஜோதிராஜா மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர்கள் கோஷம் எழுப்பியபடி அங்கிருந்து சென்று சென்னை-திருச்சி சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவலறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் சென்னை-திருச்சி சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செஞ்சியில்...
இதேபோல் செஞ்சி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அப்பம்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழன், அனந்தபுரம் நகர செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினா். மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராமச்சந்திரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் செஞ்சி-விழுப்புரம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் வல்லம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, நடராஜன் ஆகியோர் தலைமையிலும், செஞ்சி நகரத்தில் பேரூர் செயலாளர் வெங்கடேசன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அர்ஜூனன் எம்.எல்.ஏ.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகில் அர்ஜுனன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திண்டிவனம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு சாலை ஓரமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டு கலைந்து சென்றனர். இதில் திண்டிவனம் நகர செயலாளர் வக்கீல் தீனதயாளன், நகரமன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், திண்டிவனம் நகர மன்ற கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், கார்த்திக் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.