சேலம் மாநகரில் 4 இடங்களில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகரில் 4 இடங்களில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
சூரமங்கலம்,
ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூரமங்கலம் பகுதி செயலாளர்கள் மாரியம்மன், பாலு ஆகியோர் தலைமை தாங்கினர். அவை தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசும் போது, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். தி.மு.க. அரசு மக்களை பற்றிகவலைப்படுவதில்லை.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது சேலம் மாவட்டத்துக்கு ரூ.380 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்என்றார்.
கோஷங்கள் எழுப்பப்பட்டன
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அஸ்தம்பட்டி போக்குவரத்து கழக பணிமனை அருகே, அம்மாபேட்டை ரவுண்டனா அருகே, தாதகாப்பட்டி கேட் அருகே ஆகிய இடங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டுபேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சவுந்திரபாண்டியன், தகவல் தொழில்நட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், கூட்டுறவு வங்கி தலைவர்கள் தங்கராஜ், ஜான்கென்னடி, வேபிரிட்ஜ் ராஜேந்திரன், சதீஷ்குமார், கவுன்சிலர் ஜனார்தனன் மற்றும் நிர்வாகிகள் அருணாசலம், தேவது, செங்கோட்டையன், முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார், துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.