அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்ககோரி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.;
தொண்டி,
ஆர்ப்பாட்டம்
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா, அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆனிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:- கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில் நெல், மிளகாய் விவசாயம் முற்றிலுமாக அழிந்து போனது. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்திய பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயன்தராத வகையில் பாரபட்சமான முறையில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
அதே நேரத்தில் பயிர் காப்பீடு செய்த திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சேர்ந்த 57 வருவாய் கிராம விவசாயிகளுக்கும், மாவட்டம் முழுவதும் 96 வருவாய் கிராம விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்துள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் வாழ்வு வளம் பெற எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் இன்று ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசு அந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கிடப்பில் போட்டுவிட்டது.
மாபெரும் போராட்டம்
ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை தமிழக அரசு கொடுக்காவிட்டால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருவாடானையில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு பேசினார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்தையா, மாணிக்கம், தமிழரசன், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், மாவட்ட துணை செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், இணைச்செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் காளிமுத்து, குப்புசாமி, அந்தோணிராஜ், கருப்பையா, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அவை தலைவர் திருமலை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் களக்குடி ராஜா, நகர செயலாளர்கள் காளிதாஸ், குட்லக் ரஹ்மத்துல்லா, ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், ஆர்.எஸ்.மங்கலம் ராஜபாண்டி, கருப்பையா, வாணியந்தல் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவாடானை நகர செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.