அ.தி.மு.க. அலுவலகம் சூறை: ஓ.பன்னீர்செல்வம் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு
அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்ட புகாரில் ஓ.பன்னீர்செல்வம் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
இரட்டை தலைமையின் கீழ் இயங்கிய அ.தி.மு.க.வை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த சமயத்தில் அ.தி.மு.க. அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். பூட்டி கிடந்த அ.தி.மு.க. அலுவலகத்தின் கதவை அதிரடியாக உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் கடந்த மாதம் 21-ந்தேதி 'சீல்' அகற்றப்பட்டது. அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
போலீசில் புகார்
அ.தி.மு.க. அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் கட்சியின் அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., அலுவலக மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அ.தி.மு.க. அலுவலகத்தில் மாயமான பொருட்கள், ஆவணங்கள் என்னென்ன? என்பதை ஆய்வு செய்து பட்டியல் தயாரித்தனர்.
இதைத்தொடர்ந்து சி.வி.சண்முகம் கடந்த மாதம் 23-ந்தேதி ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், 'அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சியின் அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள், 2 கம்ப்யூட்டர்கள், கட்சி பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள், ரூ.31 ஆயிரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன என்று விரிவான விவரங்களை வழங்கி இருந்தார்.
கோர்ட்டு விசாரணை
மேலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்து செல்லும் 'வீடியோ' ஆதாரங்களையும் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, புகழேந்தி, பெரம்பலூர் ராமச்சந்திரன், சென்னை எம்.எம்.பாபு, உசிலம்பட்டி கீதா மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாக சி.வி.சண்முகத்திடம் சி.எஸ்.ஆர். நகலை ராயப்பேட்டை போலீசார் வழங்கினர். ஆனால் அப்போது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க. கலவர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் 2 வாரங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க. கலவரம் தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
7 பிரிவுகளின் கீழ் வழக்கு
இதற்கிடையே சி.வி.சண்முகம் அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை போலீசார் கடந்த 13-ந்தேதி அன்றே ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் மீது சட்டவிரோதமாக கூடுதல் (147), கலகம் செய்தல் (148), கட்டிடங்களில் திருடுதல் (380), நம்பிக்கை மோசடி (409), தகராறு செய்து இழப்பு ஏற்படுத்துதல் (427), குற்றம் புரிவதற்காக ஒளிந்து செல்லுதல் (454), கொலை மிரட்டல் (506) (2) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கும் தகவல் நேற்று வெளியானது.
முதலில் இந்த வழக்கை பதிவு செய்து விசாரிக்க உரிய முகாந்திரம் இருக்கிறதா? என்பது பற்றி சைதாப்பேட்டை கோர்ட்டு 18-வது மாஜிஸ்திரேட்டிடம் அரசு வக்கீல் மூலம் ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி ஆலோசனை மற்றும் கருத்துகள் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில்தான் அவர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.), சி.வி.சண்முகம் அளித்த புகார் மனு விவரங்கள் முழுவதும் இணைக்கப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவர் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை களத்தில் இறங்க உள்ளனர்.