அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக அறிவித்த ஐகோர்ட்டு, அப்போது அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-07-06 23:44 GMT

சென்னை,

அ.தி..மு.க. ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதனால், கடந்த மாதம் (ஜூன்) நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் இயற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை இயற்ற தடை பெற்றார்.

இதற்கிடையே கடந்த 23-ந் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. வருகிற 11-ந் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

பொதுக்குழு அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "தமிழ்மகன் உசேன் நியமனமே சட்டவிரோதம். அதனால் வருகிற 11-ந் தேதி அவர் கூட்டும் பொதுக்குழுவும் சட்டவிரோதமாகும்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் 5 ஆண்டுகளுக்கு இருக்கும்போது, அப்பதவிகளை தன்னிச்சையாக கலைத்து விட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியாது. கட்சி விதியின்படி 15 நாட்களுக்கு முன்பே பொதுக்குழு கூட்டம் தொடர்பான அழைப்பு விடுக்கவில்லை எனவே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனால், நேரம் குறிப்பிடாமல் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். பின்னர், பிற்பகல் 2.15 மணிக்கு இந்த வழக்கை நீதிபதி விசாரணை எடுத்தார்.

அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், "பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வருகிற 11-ந் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், வேறு இடைக்கால நிவாரணங்களுக்காக இந்த ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் கூறியுள்ளது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "இந்த வழக்கில் என்ன நிவாரணம் கேட்டுள்ளீர்கள்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு, "பொதுக்குழுவுக்கு தடை கேட்டுள்ளோம். இந்த தடை கேட்கும் வழக்கை ஐகோர்ட்டு விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. எனவே, இந்த வழக்கை நாளைக்கு (வியாழக்கிழமைக்கு) தள்ளிவைக்க வேண்டும். அதற்குள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தாக்கல் செய்கிறேன்" என்று மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் பதில் அளித்தார்.

அப்போது, அ.தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், "இந்த வழக்கிற்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும். கட்சி விவகாரங்களில் கோர்ட்டு தலையிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது" என்றார்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கிறேன். அதற்குள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதேபோல் சென்னை சிவில் கோர்டடில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கை நேற்று நீதிபதி தாமோதரன் விசாரித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மனுதாரர் அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல. இதனால் அவர், இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமை இல்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறி உள்ளார்.

இந்த மனுவுக்கு அ.தி.மு.க. மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால் விசாரணை இன்று (வியாழக்கிழமை) தள்ளிவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்