தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி;
கோவை
எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி என்று கோவையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வரவேற்பு
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லியில் இருந்து கோவைக்கு நேற்று மதியம் வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை என்பது தாமதமான நடவடிக்கை. பல ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
யார் தவறு செய்தார்களோ? அவர்கள் மீது கிடைக்கப்பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.
உறுப்பினர்கள் சேர்க்கை
அ.தி.மு.க.வில் தற்போது உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கின்ற பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 1 கோடியே 75 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எங்களுடைய இலக்கு 2 கோடி உறுப்பினர்கள். அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது செயல்படுத்துகிறார். இந்த திட்டத்தை அறிவித்து 4 மாதங்கள் ஆகி விட்டது இன்னும் கணக்கெடுப்பு முடியவில்லை. தற்போது பல நிபந்தனைகள் இந்த திட்டத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேர்தலின் போது தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகித்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தபோதும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதும் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் போட்டியிட்டது. அது தொடரும்.
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றால் தி.மு.க. தான். எனவே மு.க.ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுவதற்கு எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது.
கோவை டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து கேட்கிறீர்கள். உயர் அதிகாரிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை என்றால் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட நிலைமை என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அவருக்கு மன அழுத்தம் என்று கூறுகிறார்கள். அதற்காக அவர் இறப்பதற்கு முன் 20 நாட்கள் சிகிச்சை பெற்றதாக சொல்கிறார்கள்.
அப்படி மன அழுத்தத்தில் இருந்தவரை மீண்டும் பணியில் அமர்த்தி ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின் போது இதுபோன்ற உயர் அதிகாரிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போதைய அரசு அது போன்ற சிகிச்சை அளிப்பது இல்லை.
பஞ்சு விலையை குறைக்க வேண்டும்
நூற்பாலைகள் அதிகம் இருக்க கூடிய பகுதி கோவை. தற்போது ஜவுளி தொழில் நலி வடைந்த சூழலில் உள்ளது. பஞ்சு மற்றும் இதர கழிவு பஞ்சின் விலையை குறைக்க வேண்டும் என்று ஜவுளி துறையினர் கோரிக்கை வைத்து உள்ளனர். 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து ரூ.56 ஆயிரமாக குறைந்து உள்ளது. ஆனால் கழிவு பஞ்சு மற்றும் இதர பஞ்சுகளின் விலை குறையவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
இதன் விலையை குறைக்க வேண்டும். நூற்பாலைகள் இயங்கினாலும், இயங்கவில்லை என்றாலும் டிமாண்ட் சார்ஜ் ரூ.17,200 கட்ட வேண்டும் என்று மின்வாரியம் வலியுறுத்துகிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். அவர்களின் இந்த கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்வோம்.
பொதுமக்களுக்கு அழைப்பு
விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (அதாவது இன்று) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும், தொண்டர்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்சுனன், தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல் கந்சாமி, பி.ஆர்.ஜி.அருண்குமர், முன்னாள் எம்.பி. தியாகராஜன் உள்பட உடன் இருந்தனர்.