'அ.தி.மு.க. மீது துரும்பை வீசினால் தூணை கொண்டு வீசுவோம்'-பா.ஜனதாவுக்கு செல்லூர் ராஜூ பதிலடி

Update: 2022-06-04 20:38 GMT

மதுரை, 

அ.தி.மு.க. தனித்து போட்டியிட தயாராக இருக்கிறது. எங்கள் மீது துரும்பை வீசினால் தூணை கொண்டு வீசுவோம் என்று பா.ஜனதாவுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்குறுதிகள்

பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை தர வேண்டும் என்ற ஒரு வாக்குறுதியைத்தான் தி.மு.க. இனி நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகிறார். அவர் முதல்-அமைச்சரை மாட்டி விடுவதற்காகத்தான் இப்படி கூறுகிறார் என்று நினைக்கிறேன்.

நீட் விலக்கு, 7 பேர் விடுதலை, கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு, மாதம் தோறும் மின் கட்டணம், முதியோர் ஓய்வூதிய தொகையை ரூ.1,500-ஆக உயர்த்துதல், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம், கியாஸ் மானியம் என எதையுமே நிறைவேற்றவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமி, தனக்கு கேட்ட துறை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருக்கிறார்.

அமைச்சர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதைத்தான் அண்ணாமலையும் கூறுகிறார். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் கூடுதல் தகவல்கள் கிடைத்து இருக்கும். பா.ஜனதாதான் எதிர்க்கட்சி என்ற மாயையை ஊடகங்கள்தான் ஏற்படுத்துகின்றன. அ.தி.மு.க. எதிர்க்கட்சி பணியை சிறப்பாக செய்கிறது. சட்டமன்றத்தில் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டிக்கிறோம். அதனை சபையில் சென்சார் செய்து விடுகிறார்கள். எதிர்க்கட்சி என்ற விஷயத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா ஒப்பீடு தவறானது. அ.தி.மு.க. எழுச்சியாக இருக்கிறது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ரூ.1000 உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு, நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று மக்கள் சொல்ல தொடங்கிவிட்டார்கள். அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்திற்காக ஒட்டு போட்டு தி.மு.க.விடம் ஏமாந்து விட்டார்கள்.

இந்த ஆட்சியில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. மகிழ்ச்சியாக இருப்பது சில அமைச்சர்கள்தான். தி.மு.க.வினர் கூட மனம் புழுங்கி கிடக்கிறார்கள்.

காக்கா கூட்டம்

நாங்கள்தான் இப்போது எதிர்கட்சி. எப்போதும் தமிழகத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.தான். எங்கேயோ ஒரு கூட்டத்தில் 10 ஆயிரம் பேரை திரட்டுவது பெரிய விஷயமில்லை. அது காக்கா கூட்டம். எங்கள் கூட்டம் கொள்கை கூட்டம்.

இரைகள் போட்டால் காக்கைகள் கூடத்தான் செய்யும். இரை முடிந்தால் காக்கைகள் பறந்து விடும். நாகூர் தர்காவில் காலையில் இரைக்காக அதிக புறாக்கள் இருக்கும். இதே புறாக்கள் மாலையில் வேளாங்கண்ணியில் இருக்கும். இந்த இடமாறும் புறாக்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஒரு கட்சியை எடை போடக்கூடாது.

மது விலக்கு

நான் ஒரு சவால் விடுகிறேன். எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. இதற்கு தி.மு.க.வும் மற்ற எதிர்கட்சிகளும் தயாராக இருக்கிறார்களா?. அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிட்டு தங்கள் பலத்தை காட்டட்டும். அண்ணாமலை கட்சியை வளர்க்க அரசியல் செய்கிறார் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் சொன்னது சரி தான். எங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா கட்சியை பற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. பா.ஜனதாவில் சிறப்பாக செயல்பட்ட தமிழிசை, முருகன் ஆகியோருக்கு பதவி கிடைத்தது. அதே போல் தனக்கும் பதவி கிடைக்கும் என்று அண்ணாமலைக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம், அல்லவா?

எங்கள் கட்சியை விமர்சனம் செய்யும் போது நாங்களும் சில விமர்சனங்கள் வைக்கத்தானே செய்வோம். வி.பி.துரைச்சாமி எல்லாம் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வது நியாயம்தானா?. அவர் தி.மு.க.வில் இருந்து எதற்கு பா.ஜனதா கட்சிக்கு போனார் என்று எங்களுக்கு தெரியாதா? அ.தி.மு.க. மீது யாராவது துரும்பு கொண்டு வீசினால் நாங்கள் தூணை கொண்டு வீசுவோம். அ.தி.மு.க. அமைதியாக இருப்பதுதான் பலம்.

நாங்கள் தி.மு.க. போல சட்டையை கிழிக்க மாட்டோம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது மது விலக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன ஸ்டாலின், இப்போது முதல்-அமைச்சர் ஆனவுடன் கொரோனா காலத்திலேயே மதுக்கடையை திறந்து வைத்தார். அ.தி.மு.க. ஆட்சியில் விதவைகள் அதிகமாகி விட்டார்கள். எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை எல்லாம் மூடுவோம் என்று கனிமொழி கூறினார். அவர் சொன்னபடி இப்போது மூடி விட்டார்களா?. துறை அமைச்சரே, அனைத்து பார்களையும் எடுத்து நடத்துவதாக கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்