அ.தி.மு.க. நாளை உண்ணாவிரத போராட்டம்

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்துள்ளார்;

Update: 2022-11-03 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் ராமநதி அணைக்கட்டு, கடனாநதி அணைக்கட்டு, ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம் மட்டும் பின்னர் வந்த அரசால் கைவிடப்பட்டது. 2005-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ரூ.3.64 கோடி நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு தமிழக அரசு விதி எண் 110 கீழ் ரூ.42 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணி நிறைவேற்ற அரசாணை வெளியிட்டது.

இந்த திட்டத்திற்கு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் பணியை முழுமையாக முடிக்க ரூ.41½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது.

பின்னர் ஆட்சி மாற்றத்தின் காரணமாக தற்போது தி.மு.க. அரசு அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வருகிறது.

இதேபோல் சுரண்டை - இரட்டைகுளம் முதல் ஊத்துமலை வழியாக புதிய கால்வாய் அமைக்கும் திட்டமும் கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போதைய அரசு இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

எனவே ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தையும், சுரண்டை- இரட்டைகுளம் புதிய கால்வாய் திட்டத்தையும் நிறைவேற்றக்கோரி, அந்தப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி நாளை (சனிக்கிழமை) பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் எனது தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்