மேல்மருவத்தூர் அருகே அதிமுக பொதுக்குழுவிற்கு சென்ற வேன் விபத்து - 15 பேர் படுகாயம்
மேல்மருவத்தூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.;
மதுராந்தகம்,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
இந்த வேன் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் செல்லும் பொழுது எதிர் சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி எதிரே வந்த ஆம்னி பஸ் மீது மோதியது.
இந்த தொடர்ந்து லாரி, ஆம்னி பஸ் இணைந்து அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக சென்ற வேன் மீது மோதியது.இந்த விபத்தில் லாரியின் டிரைவர், உடன் இருந்த 2 பேர் மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் மற்றும் சென்னை வானகத்தில் நடைபெறும் அதிமுக பொது குழுவில் கலந்து கொள்ள வேனில் சென்ற அதிமுக கட்சியினர் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.