அ.தி.மு.க. கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுப்பு

விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் கொடிக்கம்பம் அமைக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-11-29 18:45 GMT

விழுப்புரம்

அனுமதி மறுப்பு

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளையொட்டி கடந்த 26-ந் தேதி கட்சி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் விழுப்புரம் நகர அ.தி.மு.க. சார்பில் பொன்விழா ஆண்டையொட்டி கொடிக்கம்பம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணிகளை அக்கட்சியினர் மேற்கொண்டனர். இதையறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து அனுமதியின்றி இப்பகுதியில் கொடிக்கம்பம் அமைக்கக்கூடாது என்றுகூறி அப்பணியை தடுத்து நிறுத்தினர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதை கேள்விப்பட்டதும் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நகர செயலாளர் ஆர்.பசுபதி தலைமையில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, இணை செயலாளர் செங்குட்டுவன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், இயக்குனர் பாஸ்கரன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கலை உள்ளிட்ட பலர் அங்கு திரண்டு வந்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் தி.மு.க. எந்தவித அனுமதியும் பெறாமல் கொடிக்கம்பம் வைத்துள்ளனர். அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே காந்தி சிலை அருகில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கேட்டு மனு அளித்த நிலையில் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால்தான் தற்போது இங்கு கொடிக்கம்பம் அமைக்க இருக்கிறோம், ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம் என்ற வகையில் தடுக்கிறீர்களா, எங்களை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள், நாங்கள் ஆண்டகட்சி என்றுகூறி அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்தனர்.

நீதிமன்றத்தை நாடுவோம்

அதற்கு, இது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதி என்பதால் இங்கே கொடிக்கம்பம் அமைக்கக்கூடாது, இதுதொடர்பாக கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெறுங்கள் என அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அதன் பிறகு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஆகியோரிடம் சென்று கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கேட்டு அ.தி.மு.க.வினர் கடிதம் அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கொடிக்கம்பம் அமைக்கும் விஷயத்தில் அனைத்துக்கட்சிகளுக்கும் சமமான முறையில் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும். நான்குமுனை சந்திப்பில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி வழங்க முடியாது என்றும், அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட தி.மு.க. கொடிக்கம்பம் விரைவில் அகற்றப்படும் என்று கோட்டாட்சியர் கூறியுள்ளார். இதில் நியாயப்படி அதிகாரிகள் நடக்கவில்லையெனில் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்