அ.தி.மு.க. சார்பில் விவசாயிகள், பெண்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ்- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்
மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு விவசாயிகள், பெண்களிடம் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அழைப்பிதழ் கொடுத்தார்.;
திருப்பரங்குன்றம்,
மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு விவசாயிகள், பெண்களிடம் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அழைப்பிதழ் கொடுத்தார்.
அ.தி.மு.க. மாநாடு
மதுரையில் வருகின்ற 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடக்கிறது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் கருப்பசாமி கோவில் எதிரே 60 ஆயிரம் சதுர அடியில் மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல், மேடை அமைப்பதற்கான இறுதிகட்ட பணி நடந்து வருகிறது. அதில் மழை, வெயிலுக்கு பாதுகாப்பான தகரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் வரலாற்று புகைப்பட கண்காட்சிக்கு தனி இடம், வாகனங்களுக்கு தனி இடம், கான்கீரிட் தளம் என்றுஅமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர்களுக்கான உணவு வழங்குவதற்கான உணவுகூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொள்வதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு மாநாட்டு பணியை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை புறநகர் அ.தி.மு.க. மாவட்ட சார்பில் கட்சிஅமைப்பு செயலாளரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தனது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் நேரிடையாக சந்தித்து மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
விவசாயிகள், பெண்களுக்கு அழைப்பிதழ்
இந்த நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய சார்பில் சூரக்குளத்தில் மாநாட்டிற்கான அழைப்பு விடுதல் நிகழ்ச்சி நடந்தது. திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான ரமேஷ் முன்னில வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து மாநாட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். மேலும் அவர் வயல் பகுதிகளில் விவசாயிகளையும், தோட்டங்களில் பூப்பறித்து கொண்டிருந்த கூலி தொழிலாளிகளான பெண்களையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். அவரிடம் மாநாட்டுக்கு உறுதியாக வருவதாக பெண்கள் கூறினர். நிகழ்ச்சியில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் ஓம் கே.சந்திரன், மாவட்ட பொருளாளர் அம்பலம், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், கருப்பாயூரணி ஆண்டிசுரேஷ், கார்சேரிகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.