அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகள் உள்பட 44 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகள் உள்பட அவர்கள் தொடர்புடைய 44 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

Update: 2022-09-14 00:21 GMT

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் மீது புதிதாக ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவிப்பை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலையில் வெளியிட்டனர்.

அதிரடி சோதனை

இந்த வழக்குகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் அவர்கள் சம்பந்தப்பட்ட 44 இடங்களில் அதிரடி சோதனை நடப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் 200 லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடத்தப்பட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ரூ.500 கோடி முறைகேடு

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், தற்போதைய தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றிய திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்த பணிகள் வழங்கியதில் அரசுக்கு ரூ.500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணை நடந்தது. அதன் அடிப்படையில் மேற்கண்ட புதிய வழக்கு போடப்பட்டது.

வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்கள் என மொத்தம் 31 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

10 பேர் மீது வழக்கு

இந்த வழக்கில் 10 பேர் பெயர்கள் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1. எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர். 2.கே.சந்திரபிரகாஷ்-மேலாண்மை இயக்குனர், கே.சி.பி.என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெங்கராஜபுரம் மெயின் ரோடு, கோடம்பாக்கம். 3.ஆர்.சந்திரசேகர்-இயக்குனர், கே.சி.பி.என்ஜினீயர்ஸ், பிரைவேட் லிமிடெட், ரெங்கராஜபுரம் மெயின்ரோடு, கோடம்பாக்கம். 4.டி.ஸ்ரீநிவாசன்-மேலாண்மை இயக்குனர், ஏ.சி.இ.டெக் மெஷினரி காம்போனென்ட்ஸ் இந்தியா, பிரைவேட் லிமிடெட்.வடவள்ளி, கோவை. 5.டி.சித்தார்த்தன்-இயக்குனர், ஏ.சி.இ.டெக் மெஷினரி காம்போனென்ட்ஸ் இந்தியா, பிரைவேட் லிமிடெட், வடவள்ளி, கோவை. 6.கே.யு.ராஜன்-சி.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவன உரிமையாளர். பி.என்.புதூர், கோவை. 7.ஓ.டி.ராதாகிருஷ்ணன்-உரிமையாளர், சபரி எலக்ட்ரிக்கல்ஸ், அம்பத்தூர், சென்னை. 8.ஆர்.பரசுராமன்-பங்குதாரர், முருகன் எலக்ட்ரிக்கல்ஸ் டிரேடர்ஸ், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை. 9.பி.விஜயகுமார்-பங்குதாரர், ஓரியண்ட் போல்ஸ், வேளச்சேரி மெயின் ரோடு.சென்னை. 10.கே.மணிவண்ணன்-உரிமையாளர், ஆர்.கே.எம்.எலக்ட்ரிக்கல்ஸ், ஒத்தவாடை தெரு, கோடம்பாக்கம், சென்னை. இவர்கள் தவிர மேலும் சிலரும் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு கொடுத்த புகார்

தமிழக சபாநாயகர் அப்பாவு, கடந்த 20-5-2019 அன்றும், 15-7-2020 அன்றும் கொடுத்த புகார்கள் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தை விலையை விட மிகவும் அதிகமாக விலை கொடுக்கப்பட்டு, எல்.இ.டி. விளக்குகள் முறைகேடாக வாங்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் பரீச்சார்த்தமாக நடத்திய விசாரணையில் மட்டும் ரூ.74 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, இந்த திட்டத்தின் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் ரூ.500 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கோவை வீடு மற்றும் அவருக்கு தொடர்புள்ள இடங்கள், குறிப்பிட்ட 9 நிறுவனங்களின் அலுவலகங்கள், அதன் உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை இரவு வரை நீடித்தது.

தகுதிசான்றிதழ் வழங்கியதில் முறைகேடு

தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் மீது புதிய ஊழல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு மாறாக, தனியார் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கும், மருத்துவமனைக்கும் தகுதி சான்றிதழ் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்த வழக்கில் சி.விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலுமாக மொத்தம் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை வேட்டை நடத்தினார்கள்.

விஜயபாஸ்கர் வீட்டில்...

சென்னை அடையாறு எல்.பி.சாலையில் டி.வி.எச். அடுக்குமாடி குடியிருப்பில் 9-வது மாடியில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை கீழ்ப்பாக்கம் ரெம்ஸ் தெருவில் உள்ள, விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் விஜயபாஸ்கரின் வீடு போன்றவற்றில் சோதனை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், சவுராஸ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்