அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

திருமானூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-27 18:53 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் வரவேற்று பேசினார். பழங்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சாமிநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி கூறியதாவது:- திருமானூர் ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் அடுத்த மாதம் 2-ந் தேதிக்குள் ஒவ்வொரு கிளை கழகமும் பூத் கமிட்டிகள் அமைத்து அதன் படிவங்களை மாவட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் திருமானூர் ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி அரியலூர்-தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடத்தில் திருமானூரில் புதிய பாலமும், தூத்தூரில் கதவுடன் கூடிய தடுப்பணையும் கட்டுவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தும் நிலையில் இருந்தது. தி.மு.க. அரசு அனைத்தையும் ரத்து செய்துவிட்டது. அரியலூர் மாவட்டத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் ஓடும் பகுதியில் உள்ள ஏரிகள் குளங்களை தூர்வாரவும், வாய்க்கால் மற்றும் சுக்கிரன் ஏரியை தூர்வாரவும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவை அனைத்தையும் இப்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த திட்டங்களை எல்லாம் நாம் மீண்டும் கொண்டு வர அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாட்டில் அனைத்து அணியினரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரத்தை பலப்படுத்த வேண்டும். 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை செயல்படுத்த நாம் தேர்தல் பணி ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் தனலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் பாவேந்தன், குமரவேல், சேட்டு, தவமணி, முருகேசன் உள்பட அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்